Tuesday, July 31, 2012

கசகசா வை உணவுகளில் பயன்படுத்தலாம ?


இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். 


கசகசா வை ஆங்கிலத்தில் "Opium Pappy" என்று சொல்லப்படும்.


இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் "Opium" என்ற போதைப் பொருள்.

இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.

கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியை பாருங்கள்.

சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் :  ”வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார் அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.

 கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.

இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க… உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.

கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

எல்லா வகையான போதைப் பொருட்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585)

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல் பித்உ, அல் மிஸ்ர்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343)

கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)

எனவே உணவுகளில் கசகசா வை சேர்த்துப் பயன்படுத்துவதையும், கசகசா சேர்க்கப்பட்ட உணவுகளையும் கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே மார்கத்தின் தெளிவான தீர்ப்பாகும்.

Sunday, July 29, 2012

மஸ்ஜிதுல் அக்ஸா


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மஸ்ஜிதுல் அக்ஸா - வரலாற்றுச் சுருக்கம்


உலகில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்சாவாகும்.
புனித கஃபா கட்டப்பட்டு நாற்பது வருடங்களின் பின் மஸ்ஜிதுல் அக்சா கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பல மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி மஸ்ஜிதுல் அக்சா நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
நபி தாவூத் (அலை) அவர்களால் மீண்டும் மஸ்ஜிதுல் அக்சா புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
இறுதியாக நபி சுலைமான் (அலை) அவர்களால் மஸ்ஜிதுல் அக்சா கட்டி முடிக்கப்பட்டது.
நபி சுலைமான் (அலை) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா கி.மு.587 இல் பாபிலோனிய மன்னன் நேபுச்சட்னேச்சர் ( Nebuchadnezzar ) ஆல் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்சாவையே யூதர்கள் சுலைமான் நபி அவர்களுக்காக கட்டிய ஆலயம் என வாதாடுகின்றனர்.
கி.மு.167 இல் யூதர்கள் இதனை மீண்டும் புனர்நிர்மாணம் செய்தனர் ஆனால் கி.பி.70 இல் யூதர்கள் ஜெருசல நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கி.பி.637/8 இல் உமர் இப்னு கத்தாப் (ரலி) ஜெருசல நகரை கைப்பற்றும் வரை கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் மஸ்ஜிதுல் அக்சா வளாகம் குப்பை போடும் இடமாக இருந்துவந்தது.
உமையாத் கலீபா அப்துல்லா மாலிக் இப்னு மர்வானால்  கி.பி. 692 (ஹி.ஆ.72/73) இல் அல் சக்ராஹ் (Al-Sakhrah Mosque) கட்டப்பட்டது.
1967 இல் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையால் புனித மஸ்ஜிதுல் அக்சா ஆக்கிரமிக்கப்பட்டது.
யூத ஆக்கிரமிப்பாளர்கள் மஸ்ஜிதுல் அக்சாவை  அழிக்க பல முயற்சிகள் செய்தனர்.இன்னும் செய்துகொண்டும் உள்ளனர்.
900 ஆண்டுகள் பழமையான, இஸ்லாத்தின் மிக உன்னதமான வீரர்களில் ஒருவரான சலாஹுத்தீன் ஐயூபி அவர்களால் கட்டப்பட்ட மிம்பர் 1967 இல் அழிக்கப்பட்டது.
சியோனிச யூத சக்திகள் மஸ்ஜிதுல் அக்சாவை அழித்துவிட்டு அவ்விடத்தில் யூத ஆலயம் ஒன்றை நிறுவ முயற்சி செய்துவருகின்றனர்.
எங்கள் ஒவ்வொரு தொழுகையிலும்  மஸ்ஜிதுல் அக்சாவுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் துவா செய்வோம். ஆமீன்.

Sunday, July 22, 2012

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்




ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொரு ரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் – களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் – உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு – ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.


வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ”நோன்பு” என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.


தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..




அல்லாஹ் கூறுகிறான்..


விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)


ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)


நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)


பிறை பார்த்து நோன்பு..


நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.


தகவலறிந்து நோன்பு..


மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையைப் பார்த்தேன்’ என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.


ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.


நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்..


ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.


ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு..


நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.


வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது..


என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.


இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு..


அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ”இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை” என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.


(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.


சக்தி பெற்றவருக்கே நோன்பு..


யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.


நோன்பாளி மறந்து விட்டால்..


நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.


நோன்பாளி என்று கூறி விட வேண்டும்..


உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


பொய் சொல்லலாகாது..


(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.


தண்ணீர் தூய்மைப் படுத்தும்..


உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.


உணவிற்கே முதலிடம்..


இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.


இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.


விடுபட்ட நோன்புகள்..


ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.


நோன்பாளி தன் மனைவியிடத்தில்..


நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.


(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)


நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்..?


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்’ என்றார்,


”என்ன நாசமாகி விட்டீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,


‘ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்’ என்றார்,


”ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,


”தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இல்லை’ என்றார்,


அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘இயலாது’ என்றார்,


பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,


(அதை அவரிடம் வழங்கி) ”இதை தர்மம் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் ‘என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..’ என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ”இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக” என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.


”அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.


குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா..?


நபி (ஸல்) அவர்கள் உறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்

Saturday, July 21, 2012

ரமலான் கால சிந்தனைகள்


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு: ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..

இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது சிறப்பு: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

மூன்றாவது சிறப்பு: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நான்காவது சிறப்பு: ‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்

நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:
ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).

ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:

பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.

‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

பிறை

உலகமெல்லாம் ஒரே சூரியன், உலகமெல்லாம் ஒரே சந்திரன்

உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள். எனவே சவூதியில் பிறை பார்த்து, அல்லது விஞ்ஞான அடிப்படையில் கணித்து, இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

வானியல் அறிவு இல்லாத மக்களுக்கு இது பெரிய விஞ்ஞான உண்மை போலவும், அறிவுப்பூர்வமான வாதம் போலவும் தோன்றுகிறது.

ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது இதை விட அபத்தமான வாதம் ஏதும் இருக்க முடியாது. இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. அறிவுப்பூர்வமான வாதமும் இல்லை.

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது.

சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
அல்குர்ஆன் 6:96

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
அல்குர்ஆன் 55:6

இந்த வசனங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே நமக்குக் காலம் காட்டிகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 17:78

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.
அல்குர்ஆன் 20:130

இந்த வசனங்களில் சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நமது வணக்கங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறான்.

இரண்டுமே காலம் காட்டிகள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.

இரண்டும் எவ்வாறு காலம் காட்டிகளாக உள்ளன என்பதைத் தான் பலரும் அறியாமல் உள்ளனர்.

சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.
நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.

நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.

நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

அதாவது சூரியனும் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.
உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.
நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்' என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார். அவருக்கு சூரியன் மறைய இன்னும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாகவே ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?
இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.
சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.
இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

சந்திரனில் எவ்வாறு ஒளி தோன்றுகிறது? சந்திரன் பூமியைப் போன்ற மண் உருண்டை தான். அதில் வெளிச்சம் தருவதற்கு ஒன்றுமே இல்லை.

நாம் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை ஒரு சுவரில் பாய்ச்சினால் அதன் மீது வெளிச்சம் பட்டு அதிலிருந்து இலேசான வெளிச்சம் பிரதிபலிக்கும்.

அது போல் தான் சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படும் போது சந்திரனிலிருந்து அவ்வெளிச்சம் பூமியை நோக்கி எதிரொளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சந்திரனில் நாம் வெளிச்சத்தைக் காண்கிறோம்.

மற்றபடி சந்திரனில் நெருப்போ, வெளிச்சம் தரும் வேறு எதுவுமோ கிடையாது. சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கி எடுத்து வந்தது மண்ணைத் தான்.

ஓர் உருண்டை வடிவமான பொருள் மீது நாம் வெளிச்சம் பாய்ச்சினால் அவ்வுருண்டையின் சரிபாதியின் மீது மட்டுமே வெளிச்சம் பாய்ச்ச முடியும். இன்னொரு பாதியின் மீது வெளிச்சம் படாது. இதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

அதனால் தான் எந்த நேரமும் பூமியின் பாதிப் பகுதி பகலாகவும், பாதிப் பகுதி இரவாகவும் உள்ளது.

இதே அடிப்படையில் தான் கிரகணம் ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் (அமாவாசை உட்பட) சூரியனின் ஒளி சந்திரனின் சரிபாதியில் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறது.

பவுர்ணமி தினத்தில் எப்படி பாதி சந்திரன் மீது ஒளி பட்டு பூமியை நோக்கித் தெரிகிறதோ அது போலவே அமாவாசையின் போதும் பாதி சந்திரன் மீது சூரிய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

முதல் பிறையின் போதும் பாதி சந்திரன் மீது ஒளி பட்டுக் கொண்டிருக்கிறது.

365 நாட்களும் (கிரகண நாட்கள் தவிர) சந்திரனின் சரிபாதியானது, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவும், மற்றொரு பாதி இருட்டாகவும் இருக்கிறது.

பவுர்ணமியில் சந்திரன் மீது வெளிச்சம் படும் போது, வெளிச்சம் படும் பகுதியை முழுமையாகப் பூமியை நோக்கி சந்திரன் காட்டுகிறது. அமாவாசையின் போது சூரிய ஒளி பட்ட பகுதியை பூமியின் எதிர்த் திசையில் காட்டி விட்டு வெளிச்சம் படாத பகுதியை நம்மை நோக்கிக் காட்டுகிறது.

அமாவாசையில் நமக்குத் தான் வெளிச்சம் தெரியவில்லையே தவிர சந்திரனில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டு தான் உள்ளது.
நாம் ஒருவரை நேருக்கு நேராகப் பார்த்தால் நமது மூக்கு முழுமையாக அவருக்குக் காட்சி தருகிறது. நாம் சற்றே திரும்பினால் நமது மூக்கின் ஒரு பகுதி அவருக்குத் தெரிகிறது. நாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு முதுகைக் காட்டினால் அவருக்கு நமது மூக்கு தெரியாது. அவருக்கு மூக்கு தெரியாததால் நமக்கு மூக்கே இல்லை என்று கூற முடியாது.

அது போல் தான் சந்திரன் மீது படும் வெளிச்சத்தில் பெரும் பகுதியை பூமிக்கு எதிர்த் திசையில் காட்டி விட்டு, பூமியை நோக்கி ஓரமாகக் காட்டினால் அதை முதல் பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் காட்டும் அளவை அதிகரிக்கும் போது நாட்களின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்கிறோம்.

இந்த விபரங்களை எதற்குச் சொல்கிறோம் என்றால், சந்திரனில் காலத்தைக் காட்ட ஒன்றுமே இல்லை. அது எல்லா நாளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அது நம்மை நோக்கி எந்த அளவு திரும்புகிறது என்ற அடிப்படையில் தான் காலம் காட்டுகிறது.
எனவே நம்மை நோக்கி அது திரும்பி விட்டதா? என்பதன் அடிப்படையில் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, யாரையோ நோக்கித் திரும்பியதை நம்மை நோக்கித் திரும்பியதாகக் கருதக் கூடாது.

இதைப் புரிந்து கொண்டால் இவர்களின் அறியாமையை அனைவரும் புரிந்து கொள்வார்கள்

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!


மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!

‘ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு மகிழ்வீர்களாக! இந்த மரத்தை மட்டும் நெருங்கி விடாதீர்கள்! அவ்வாறு நெருங்கினால் அநீதியிழைத்தவராவீர்கள்’ என்று நாம் கூறினோம்.

ஆனால் அவ்விருவரையும் ஷைத்தான் அதிலிருந்து தடம் புரளச் செய்தான். அவர்கள் எதிலிருந்தார்களோ அதிலிருந்து அவ்விருவரையும் அவன் அப்புறப்படுத்தினான். (அல்குர்ஆன் 2:35,36)

பெண்கள் ஆண்களுக்கு இன்பம் அளிப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள், அவர்களுக்கென ஆசாபாசங்களோ உரிமைகளோ கிடையாது என்று தான் பெரும்பாலான மதங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு ‘ஆன்மா’ இருக்கிறதா என்ற வாதப்பிரதி வாதங்கள் கூட நடந்துள்ளன.

சொத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. தங்கள் பெயரில் எந்தச் சொத்துக்களையும் அவர்கள் வைத்துக் கொள்ள முடியாது. திருமணம் நடக்கு முன் தந்தையையும் திருமணத்திற்குப் பின் கணவனையும் சார்ந்தே அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கி பெண்களை பகுத்தறிவு இல்லாத பிராணிகளைப் போல் நடத்தி வந்தனர்.

இன்றைக்கும் கூட பெண்ணுரிமை என்ற பெயரால் கவர்ச்சி காட்டி ஆண்களை மயக்கக் கூடியவர்களாகவும் தாங்கள் நடந்து கொள்வதற்கு உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர்.

அந்தக் கோட்பாடுகளை திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றன.

கடவுள் முதன் முதலில் ஒரே ஜோடிளைத்தான் நேரடியாகப் படைத்தான். அவர்களிலிருந்து பல்கிப் பெருகியதே மனித சமுதாயம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட தம்பதிகள் குறித்தே மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.

அவ்விருவரையும் படைத்த இறைவன் அவர்களை சொர்க்கப் பூங்காவில் தங்கச் செய்து அதன் பாக்கியங்களை அனுபவித்துக் கொள்ள அனுமதிக்கின்றான். அந்தக் கட்டத்தில் கடவுள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கருத்துடன் கவனிக்கத் தக்கவையாகும்.

இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு தம்பதியரை விருந்துக்கு அழைத்தால் கணவரிடம் மட்டும் கூறினாலே போதும் என்ற நிலை இருக்கிறது. குடும்பத்துடன் வந்து விடுங்கள் என்ற அழைப்பின் காரணமாக – மனைவி தனியாக அழைக்கப்படா விட்டாலும் – மனைவியையும் அழைத்துச் செல்வோர் நாகரீக உலகத்திலும் இருக்கிறார்கள்.

ஆனால் மனித சமுதாயம் உள்ளிட்ட அகில உலகையும் படைத்த இறைவன், நீங்கள் இருவரும் தங்குங்கள்! நீங்கள் இருவரும் உண்ணுங்கள்! என்று இருவரையும் சமநிலையில் நிறுத்துகிறான்.

பொதுவாக உணவுகள் விஷயத்தில் பெண்களுக்கு என தனி விருப்பம் இருப்பதை ஆண்கள் உணர்வதில்லை. ஆண்கள் எதை வாங்கிப் போடுகிறார்களோ அதை ஆக்கிப் போடுவது மட்டும் தான் மனைவியரின் வேலை என்பது தான் நடைமுறை.

விருப்பமான உணவுகள் சமைக்கப்பட்டால் கூட சமைத்தவளை மறந்துவிட்டு அனைத்தையும் மேய்ந்து விட்டு பாத்திரத்தைக் காலியாக வைத்துச் செல்லும் கணவர்கள் ஏராளம்.

ஆனால் படைத்த இறைவன் அப்படிக் கருதவில்லை. நீங்கள் இருவரும் விரும்பியவாறு உண்ணுங்கள் என்கிறான். பெண்களுக்கு தனி விருப்பங்கள் உள்ளன என்கிறான். ஆண் விரும்புவதைத் தான் பெண்ணும் விரும்ப வேண்டும் என்பது கிடையாது என்கிறான்.

அது ஏதோ இந்த நூற்றாண்டில் கூறப்பட்டதன்று. நபிகள் நாயகம் காலத்தில் கூறப்பட்டதன்று. பெண்ணுரிமைக்காக பலத்த குரல் எழுப்பப்பட்ட போது கூறப்பட்டதன்று. ‘ஆன்மா’ இருக்கிறதா என்ற சர்ச்சை நடந்த காலத்தில் கூறப்பட்டதுமன்று.

வேறு எவரும் படைக்கப்படாத நேரத்திலேயே, இரண்டே இரண்டு பேர் மட்டும் படைக்கப்பட்டிருந்த நேரத்திலேயே இறைவன் இவ்வாறு கூறிவிட்டான். அதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நினைவு படுத்துகிறான்.

அதுமட்டுமின்றி இறைவன் குறிப்பிட்ட மரத்தை நெருங்க வேண்டாம் என்று தடையுத்தரவு பிறப்பித்தான். அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கும் போதும் இருவரையும் அழைத்தே தடையுத்தரவைக் கூறுகிறான். நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள் என்ற வாசகத்திலிருந்து இதை உணரலாம்.

அந்தக் கட்டளையை மீறி தடை செய்யப்பட்ட மரத்தை நெருங்கினார்கள். அந்த நிகழ்ச்சி குறித்து பைபிள் கூறும் போது, ஆதம் மிகவும் கட்டுப்பாடாக நடந்து கொண்டது போலவும், அவரது மனைவியிடம் தான் ஷைத்தான் கைவரிசையைக் காட்டியதாகவும், அவள் தான் தடையை மீறியதாகவும் குறிப்பிடுகிறது.

பெண்கள் வழிகெட்டவர்கள், பிறரை வழி கெடுப்பவர்கள், ஆண்கள் மகா பரிசுத்தர்கள் என்று சித்தரிக்கும் வகையில் பைபிள் அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.

ஆனால் திருக்குர்ஆனின் இந்த வசனங்கள் அதை மறுக்கின்றன.

ஷைத்தானுக்கு கட்டுப்பட்டு கடவுளின் கட்டளையை இருவரும் தான் மீறினார்கள். தடை செய்யப்பட்டவைகளை விரும்புவது பெண்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. ஆண்களும் அத்தன்மையைப் பெற்றவர்கள் தாம் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

மனிதன் என்ற தன்மை, அதாவது ஆசை, கோபம், கடவுளின் கட்டளையை மீறுதல், மனோ இச்சைக்கு அடிபணிதல் ஆகிய குணாதியங்கள் பெண்களிடம் இருப்பது போலவே ஆண்களிடமும் உள்ளன. அதனால் தான் இருவரும் பாவம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அது மாத்திரமின்றி தவறுகளுக்குத் தண்டனை வழங்குவதிலும் இன்றைய உலகில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.

ஆண்களின் தவறுகள், ‘ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்’ என்ற வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன.

அதே போல் தவறுகளுக்காக பெண்கள் தண்டிக்கப்படும் போது, ‘பாவம் பெண்கள்! ஆண்களைப் போல் அவர்களைத் தண்டிக்கலாமா?’ என்று பச்சாதாபம் காட்டப்படுகின்றது.

அந்த இரண்டு தவறான கோட்பாடுகளையும் இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. இருவரையும் உடனே வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.

ஆண் தப்புச் செய்யலாம். பெண் தப்புச் செய்யலாமா என்று கூறி பெண்களை மட்டும் தண்டிக்கவில்லை. பெண் பலவீனமானவள். அவளைத் தண்டிக்க முடியாது. நீ மட்டும் வெளியே போய் விடு என்று ஆணை மட்டும் வெளியேற்றவில்லை.

அந்த வசனங்கள் இரண்டையும் இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது உடலமைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் மனிதத் தன்மையில் இருவரும் சமமானவர்களே என்று குர்ஆன் கூறுவதை உணரலாம்.

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே என்ற கோட்பாடு தான் உலகின் முதல் கோட்பாடு மனிதர்கள் தான் அந்தக் கோட்பாடுகளை மாற்றிவிட்டார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்குத் தான், முதல் தம்பதிகளுக்கு இறைவன் பிறப்பித்த கட்டளையை நினைவுபடுத்துகிறான்.

Wednesday, July 18, 2012

இஸ்லாத்தில் ஆடைகள்


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்




இஸ்லாத்தில் ஆடைகள்

இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும், அவைகள் பின்வருமாறு:

1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.

யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் :அபூதாவூத்: 4031) 

2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.

பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும், ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்.)

3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது

யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

4. ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது.
கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

இன்னும் ஒரு அறிவிப்பில் :-நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுமுள்ளவர்கள் யார் என வினவினார்கள்? கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும் என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

5. உருவமுள்ள ஆடையை அணியக்கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவமுள்ள தலையணையை வாங்கியிருந்தார்கள், நபியவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அதைக்கண்டு வீட்டுக்குள் நுழையாமல் கதவடியிலேயே நின்று விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபியவர்களின் முகத்திலே வெறுப்பைத் தெரிந்து கொண்டபின் நான் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் பாவமன்னிப்புத்தேடுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். இந்த உருவத்தை தீட்டியவர்கள் நாளை மறுமையிலே வேதனை செய்யப்படுவார்கள், இன்னும் நீங்கள் படைத்ததற்கு உயிரூட்டுங்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் . (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

6. மேனி தெரியுமளவுக்கு மெல்லிய, அல்லது சிறிய உடையை அணியக்கூடாது.

7. வெள்ளை ஆடை அணிவது மிகவும் நல்லது.

வெள்ளை ஆடையை அணியுங்கள் அது மிகவும் தூய்மையும் நல்லதுமாயிருக்கும். உங்களின் மைய்யித்தை அதிலேயே கஃபனுமிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். . (ஆதாரம் : அபூதாவூத், நஸாயி , திர்மிதி)

8. பெண்கள் தங்களின் மேலாடையை எப்படி வைத்துக்கொள்வது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஒரு சாண் இறக்கி உடுக்கவேண்டுமென்று நபியவர்கள் விடையளித்தார்கள். அப்போது கால்பாதம் தெரிகின்றதே! என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்க ஒரு முழமளவிற்கு நீட்டி உடுத்துக்கொள்ளட்டும். அதைவிடவும் அதிகப்படுத்தக்கூடாது என்றார்கள் நபியவர்கள். (ஆதாரம் : திர்மிதி)

9. இறுக்கமான, மற்றவர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனைகளை உருவாக்கும், இன்னும் உறுப்புக்களின் அமைப்பை வெளிப்படுத்தக்கூடியது போன்ற ஆடைகளை அணியக்கூடாது விஷேஷமாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

10. செருப்பு, இன்னும் ஆடைகளை அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.

11. நஜீஸான (அசுத்தமான) தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியக்கூடாது.



Tuesday, July 17, 2012

மூடநம்பிக்கை.

மூடநம்பிக்கை.
அப்துல் ஹமீது மௌலவி


இறுதிநாள் நெருங்குகிறது


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


இறுதிநாள் நெருங்குகிறது உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப்பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம். இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது... பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2) பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21) இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5) வானம் பிளந்து விடும்போது (84:1) வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1) இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது... ''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி) உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில... 'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157) ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231) என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்) அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி) (இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.) ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921) சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி) காலையில் எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்) முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி) பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி) பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி) பருவ மழைக்காலம் பொய்க்கும். திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும். முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர். பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா) யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.) வியாபாரமுறைகள் மாறும் (புகாரி) (இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.) பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்) ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்) திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி) சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர். ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்) சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள். பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள். சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும். பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424) பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி) உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068) அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி) முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள். பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்) முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி: நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456) (சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.) எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன? மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும். நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும். மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும். இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக! இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக! நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்! நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!! இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64) நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1) மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1) சிந்திப்போம்!! ♥