Friday, June 10, 2016

மாவீரர் துல்கர்னைன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.


''(நபியே!) 'துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக!. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'' (அல் குர்ஆன் 18:83-6)

தரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாறு!

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முஹம்மது நபியிடம் அந்த அரபிகள் மூன்று கேள்விகளைக் கேட்டனர். ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன? யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களை அரபிகள் முஹம்மது நபி அவர்களை பரீட்சிப்பதற்காக கேட்கப்பட்ட போது பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

துல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல யூகங்களை சொல்கின்றனர். அதில் உண்மைத்தன்மையை காணமுடியவில்லை. ஆனால் மார்க்க அறிஞர்களில் சிலர் துல்கர்னைன் அவர்களை நபி என்று கூறுகிறார்கள். அதற்கான அத்தாட்சியாக பின்வரும் விடயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம். (18:84)
"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்(18.98)


(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; "அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக.

நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம்.

(ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; "எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்." பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

(வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.

அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.

அதற்கவர்; "என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்" என்று கூறினார்

"நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் "உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்" (என்றார்).

எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார். (18:83-98)


இறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.

அடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே!

அக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.

 மேற்கு கிழக்காகிப் போன அற்புதம்!   

தன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.

பின்னர் ஒரு வழியில் சென்றார் (அல் குர்ஆன் 18:89)

இந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை (அல் குர்ஆன் 18:90)

மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும்? நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா? ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.

தகவல் உதவி: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.

No comments:

Post a Comment